தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன்..!
தேனி அருகே தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன் கண்டமனூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தன்னுடன் படிக்கும் சிறுவனை தனசேகரன் அடிக்கடி கேலி செய்துள்ளார். இதனால் தனசேகரனுக்கும் கேலி செய்யப்பட்ட மாணவனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனசேகரன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் அந்த சிறுவனை கேலி செய்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கத் துவங்கியுள்ளனர். அப்போது கேலிக்கு உள்ளான மாணவன் தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் தனசேகரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த தனசேகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
தொடர்ந்து ஆசிரியர்கள் தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பெற்று பலனளிக்காமல் தனசேகரன் பரிதாபமாக இறந்து போய் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மாணவனை கைது செய்தனர்.
இறந்த தனசேகரனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கண்டமனூருக்கு கொண்டு செல்லப்பட்டபோது மாணவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டமனூர் தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






