வெற்றிக்கு வேலுமணி நகர்த்தும் காய்கள்… தொண்டாமுத்தூர் நிலவரம் சொல்வது என்ன?
தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுவது, திமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், முக்கியத் தொகுதிகளில் கோவை தொண்டாமுத்தூர் முக்கியமானது. காரணம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இங்கு களமிறங்குவதுதான். முஸ்லீம்கள் கணிசமாக உள்ள கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இம்முறை அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி, அமமுக சார்பில் எஸ். ஆர். சதீஷ் குமார், மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் ஸ்ரீநிதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2016 தேர்தலில், வேலுமணியை எதிர்த்து திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் சையது முகம்மது நிறுத்தப்பட்டார். அவர் 45 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். வேலுமணி 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனினும் சிஏஏ உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லீம் வாக்குகள் வரும் தேர்தலில் முழுமையாக வந்து சேரும் என்று வேலுமணி நம்பவில்லையாம்.

இத்தனைக்கும் வேலுமணி தன் சொந்தச் செலவில், பல கோடி ரூபாய் மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் அமைத்து தந்துள்ளார். இஸ்லாமிய ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு என பலவற்றை செய்துள்ளதாக, ஆதரவாளர்கள் பட்டியலை நீட்டுகின்றனர். ஆனால், அதை மட்டுமே நம்பி அசட்டையாக இருக்க முடியாது என்று வேலுமணி கருகிறார்.
இம்முறை தேர்தல் வெற்றிக்கு பல்வேறு வியூகங்களை அமைச்சர் வேலுமணி வகுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தொண்டாமுத்தூரில் தன்னை எதிர்த்து திமுக களமிறக்கி இருக்கும் கார்த்திகேய சிவசேனாபதிக்கு, கொங்கு மண்டலத்தில் ஆதரவு இருப்பதை உணர்ந்துள்ள வேலுமணி, போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறாராம்.
அதன் முதல்படியாக, திமுகவுக்கு சேரவேண்டிய இஸ்லாமியர்களின் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று முடிவு செய்த அமைச்சர், அதற்காக பலவிதமான யுக்திகளை கையாண்டதாக கூறுகிறார்கள். அதில் ஒன்றுதான் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக இஸ்லாமியர் ஒருவர் நிறுத்தப்பட்டது என்று பேசிக் கொள்கிறார்கள். முதலில் அங்கு ஸ்ரீநிதி என்ற பெண்ணை நிறுத்துவதாக இருந்தது. கடைசியில், அவருக்கு பதிலாக ஷாஜகான் என்பவர் மக்கள் நீதிமய்யம் சார்பில் நிறுத்தப்பட்டதாக, தொகுதியில் பேசிக் கொள்கிறார்கள்.
தொண்டாமுத்தூரில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்த சூட்டோடு இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அவர் இங்கு வருவதற்கும் வேலுமணிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரித்து, திமுகவுக்கு அந்த வாக்குகள் போகாமல் தடுக்கத்தான், இஸ்லாமியரான மன்சூர் அலிகான் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் இருக்கிறது என்ற ஒரு நெருடலை தவிர, தொகுதியில் உள்ள முஸ்லீம்கள் பலருக்கும் அமைச்சர் வேலுமணி மீது எந்த அதிருப்தியும் இல்லை; தொகுதிக்கும் தங்களுக்கும் நிறையவே செய்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தேர்தலில் இதெல்லாம் ஓட்டாக மாறுமா? வேலுமணியின் யுக்திகள் பலிக்குமா என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும்.






