அதிருப்தியில் தோப்பு … அமைச்சர்கள் சதி என புகார்! எடப்பாடியை சந்தித்து முறையீடு!!
அதிமுகவில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம், முதல்வர் எடப்பாடியை சந்தித்து தனது அதிருப்தியை பகீரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அத்துடன், ஈரோடு மாவட்ட அமைச்சர்கள் மீதும் பரபரப்பாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில், தற்போது அமைச்சராக உள்ள 30 பேரில் பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதி தவிர்த்து அனைவருக்கும் அவரவர் தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கொங்கு மண்டலத்தை எடுத்துக் கொண்டால், பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜன், பெருந்துறை தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோர் அடங்குவர்.

இது, தோப்பு வெங்கடாசலத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ள்ளது. இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணனும் தான் காரணம் என்று, தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். காரணம் இல்லாமல் இல்லை. 2013ஆம் ஆண்டு செங்கோட்டையனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, தோப்பு வெங்கடாசலத்திடம் தரப்பட்டது.
அமைச்சரான தோப்பு வெங்கடாசலமோ, செங்கோட்டையனை ஓரங்கட்டி தனது வளர்ச்சிக்கு அச்சாமிடும் வேலைகளை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியவர, 2016ஆம் ஆண்டு தோப்பு வெங்கடாசலத்தின் அமைச்சர் பதவி, ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது செல்வாக்கு சரிந்தது.
இதனிடையே காட்சிகள் மாறின. செங்கோட்டையன் அமைச்சரானார்; அத்துடன், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கருப்பண்ணனுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. இருவரும் சேர்ந்து, தோப்பு வெங்கடாசலத்தை முற்றிலுமாக ஓரங்கட்டினர். கட்சிக்குள் நடக்கும் இந்த உள்ளடி வேலைகள் குறித்து, முதல்வர் எடப்பாடியின் கவனத்திற்கு தோப்பு வெங்கடாசலம் கொண்டு சென்றார். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

இந்த சூழலில் தான், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. 171 பேர் அடங்கிய அந்த பட்டியலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு வாய்ப்பு தரப்படவில்லை. கட்சி தலைமை மீதும், தனக்கு எதிராக காய்களை நகர்த்திய இரண்டு அமைச்சர்கள் மீதும் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு இது பேரிடியாக இருந்தது.
இதனால் அதிருப்தியில் உள்ள தோப்பு வெங்கடாசலம், இன்று முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து, புலம்பித் தீர்த்துள்ளார். பெருந்துறையில் மீண்டும் தனக்கு வாய்ப்பு தர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் முதல்வர் தரப்பில் எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை.
முதல்வர் எடப்பாடியை சந்தித்த பின்னர், நிருபர்களிடம் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றும் வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். 2008ல் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக இருந்தபோது, மாவட்ட செயலாளராக இருந்தேன். இக்கட்டான நேரத்தில் மாவட்டச் செயலாளராக 2 ஆண்டு இருந்தேன். 2011 சட்டசபைத் தேர்தலில் பெருந்துறையில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு தந்தார்.

அந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளராக இருந்தேன்; ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அவர் இடத்தில் எடப்பாடி- ஓபிஎஸ்.ஐ வைத்து பார்த்து வந்தேன்.
ஆனால், இம்முறை எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இது என்னைவிட என் தொகுதி மக்களை ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது. உளவுத்துறை பட்டியல் அடிப்படையில் கூட பெருந்துறை தொகுதியில் என் பெயர் நன்றாக இருந்தது, கட்சி மேலிடத்திற்கு சென்றுள்ளது. அப்படியிருந்தும் வாய்ப்பு தரவில்லை.

ஈரோடு மாவட்ட அமைச்சர்கள் இருவரும் தன்னைப் பற்றி தவறான அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு கொடுத்ததன் காரணமாகவே சீட் மறுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதியில் நான் எவ்வாறு செய்ல்பட்டு உள்ளேன் என தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். போட்டி, பொறாமை என்பது மனதளவில் இருக்க வேண்டும், ஆனால் ஒரு நல்ல தொண்டனை ஒரு மக்கள் பிரதிநிதியைத் தடுக்கக்கூடிய அளவில் அமைச்சர்கள் செயல்பட்டால் அது தவறுதான்.
என்னுடைய செயல்பாடுகள் சரியில்லை என்றால் அமைச்சர்கள் என் மீது குற்றம் சொல்லலாம். நான் தொகுதிக்கு கொண்டுவரக் கூடிய திட்டங்கள் கோவப்படுத்திருக்கிறது என்று சொல்லி என்மீது அவர்கள் பொறாமைப்பட்டால் அது இந்த இயக்கத்திற்கு பாதகமாக முடியும்.
இப்போதும் அதிமுகவில் இருக்கிறேன், அதிமுகவில் இருப்பேன். ஆனாலும் வேட்பாளர் தேர்வு எந்த அடிப்படையில் நடந்துள்ளது என்று தெரியவில்லை. எனக்கு வாய்ப்பு தராததால், எங்கள் தொகுதி மக்கள் மனநிறைவாக இல்லை. என்னைப் போன்ற உண்மையான தொண்டர்களின் உணர்வுகளை ஈபிஎஸ் – ஓ.பி.எஸ். புரிந்து கொள்ள வேண்டும். ஆதரவாளர்கள், தொண்டர்கள், தொகுதி மக்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




