அமமுக பேச்சில் முட்டுக்கட்டை! தனித்தே போட்டியிட தேமுதிக முடிவு?
சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, தேமுதிக – அமமுக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை; இதையடுத்து தனித்தே போட்டியிட தேமுதிக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல், நாளை தொடங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய விஜயகாந்த்தின் தேமுதிக, எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று யோசித்து, கடைசியாக டிடிவி தினகரனின் அமமுகவுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது.
தே.மு.தி.க. – அ.ம.மு.க குறித்து இரு கட்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சந்தித்து கூட்டணி தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர். இந்த தகவலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இன்று உறுதி செய்திருந்தார்.
ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலும், தொகுதிப்பங்கீடு எண்ணிக்கை உள்ளிட்டவற்றில் இரு கட்சிகளும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வராததால் முட்டுக்கட்டை நிலவியது.
எனவே, அமமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வது என்று, தேமுதிக முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சட்டசபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவது குறித்து அக்கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இது, தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




