ஆனந்தனுக்கு பல்லடம் ஒதுக்கீடு… ‘கரை’ சேராத நடராஜன் கடுப்பு! கலக்கமூட்ட காத்திருப்பு!!
அதிமுக சார்பில் பல்லடம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக சிட்டிங் எம்.எல்.ஏ. நடராஜனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பியுள்ளனர். இது திருப்பூர் மாவட்ட அதிமுகவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அடங்கிய 2ம் கட்ட பட்டியல் நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, உடுமலை தொகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ.க்களே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த 2 பேருக்கு இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர், பல்லடம் சிட்டிங் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சராக இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு பல்லடம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், அதிக வாக்காளர்களை கொண்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற தேர்தலில் கடைசியாக 4 முறை அ.தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் கரைப்புதூர் நடராஜன் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பல்லடம் அருகே சென்னிமலைபாளையத்தை நடராஜன், 20 ஆண்டுகளாக கரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தார்.

ஆனால், எம்.எல்.ஏ.வாக இருந்து பல்லடம் தொகுதிக்கு நடராஜன் செய்த பணிகள் குறைவு என்பது, தொகுதிவாசிகள் பலரது குற்றச்சாட்டாகும். கைத்தறித் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கக் கடன்களை தள்ளுபடி செய்வதாக, அதிமுக தரப்பில் வாக்குறுதி தரப்பட்டிருந்தது.
ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மூன்றாம் குடிநீர் திட்டம் முழுமையாக செய்து முடிக்காததால், பல்லடம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை உள்ளது. அருந்ததியர் மக்களுக்கு பட்டா பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை; பட்டா வாங்கித் தரவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தொகுதி மக்களை சரியாக சந்தித்து குறை கேட்டது இல்லை என்று பலரும் முணுமுணுக்கின்றனர். கோரிக்கையுடன் வரும் பொதுமக்களைக்கூட பலமணி நேரம் காக்க வைப்பது, நிற்க வைத்து அவமதிப்பது என்று, கரைப்புதூர் நடராஜன் மீதான் தொகுதி மக்களின் அதிருப்தியை “குற்றம் குற்றமே” வார இதழ் சுட்டிக் காட்டியிருந்தது. நடராஜன் மீண்டும் பல்லடத்தில் நிறுத்தப்பட்டால், கரை சேரமாட்டார் என்றும் ‘குற்றம் குற்றமே’ இதழ் சுட்டிக் காட்டியிருந்தது.
கரைப்புதூர் நடராஜன் செயல்பாடுகள் குறித்த புகார்கள் அடிப்படையில்தான், அதிமுக தலைமையும் இம்முறை அவருக்கு வாய்ப்பு தரவில்லை. அதிமுக தலைமை நல்ல முடிவு எடுத்ததுதான் கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை என்று இலைக்கட்சியினரே வெளிப்படையாக கூறுகின்றனர்.

ஆனால், கரைப்புதூர் நடராஜனால் ஆதாயம் பெற்ற, அவருக்கென்ற சில ஆதரவாளர்களும் இருக்கத்தான் செய்வார்கள். நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியலில் கரைப்புதூர் நடராஜன் பெயர் மிஸ்ஸிங் என்று தெரிந்ததும், உடனே பல்லடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு, கரைபுதூர் நடராஜனுக்கு தங்களது விஸ்வாசத்தை காட்டிக் கொண்டனர்.
கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு, அவரது ஆதரவாளர்கள் நேற்றிரவு, கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில், சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் கரைப்புதூர் நடராஜனுக்கு சீட் கிடைத்ததே, எம்.எஸ்.எம். ஆனந்தனின் தயவில்தான் என்பதை அவரது ஆதரவாளர்கள் மறந்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அதிமுக தொண்டர்கள் குமுறுகின்றனர். தேர்தல் நேரத்தில் இப்படி உட்கட்சி பிரச்சனையை பெரிதாக்கி, வீதிக்கு கொண்டு வந்தால், தேர்தலில் அதிமுகவின் வெற்றியைத்தானே அது பாதிக்கும் என்பதை, நடராஜன் ஆதரவாளர்கள் ஏன் உணரவில்லை என்று, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மையான எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாவின் விஸ்வாசி என்றால், கரைப்புதூர் நடராஜனும், அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும்; இப்படி பிரச்சனையை கிளப்பி, எதிர்க்கட்சிகளின் வாய்க்கு தீனி போடுவதாக, அதிமுக தொண்டர்கள் வருத்தத்தோடு தெரிவித்துள்ளனர்.
திமுகவிலும் எதிர்ப்பு
திமுக கூட்டணியில் பல்லடம் தொகுதியானது, ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் தொகுதியில் தி.மு.க. வுக்கு ஒதுக்கப்படும், என தி.மு.க.வினர் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல், நேற்று வெளியானது. இதனால் தி.மு.க.வினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். நேற்றிரவு, திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பல்லடம் நால் ரோடு மற்றும் அருள்புரம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பல்லடம் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு விரைந்த பல்லடம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




