--- --:--:-- --

எடப்பாடியில் அதிமுக மண்ணை கவ்வும்… இலவசம் தந்து ஏமாற்றுகிறார்கள்… விஜய பிரபாகரன் ஆவேசம்!

vijaya prabhakaran

இனி அதிமுகவுக்கு இறங்குமுகம் தான். எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. தொகுதி ஒதுக்கீடு எண்ணிக்கையில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாததால், தேமுதிக வெளியேறியது. அதிமுகவில் இருந்து தேமுதிக வெளியேறிய நாள், தங்களுக்கு தீபாவளி என்று எல்.கே. சுதீஷ் தெரிவித்தார்.

 

இந்த சூழலில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆவேசமாக பேசி, அதிமுக – திமுகவை சாடினார். அவர் பேசியதாவது:

 

இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை சீரழிக்கின்றனர். மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து, பிறகு அவர்களிடம் இருந்து சுரண்டுகின்றனர். ரூ.1000, ரூ.1500 வருமானம் கூட கிடைக்காத நிலையிலா தமிழக மக்கள் உள்ளனர்? ஆனால், மக்களின் நன்மைக்காக பாடுபட்டவர் கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான். கொடுத்து கொடுத்து சிவந்து போனது அவரது கரங்கள்.

 

அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டோம். குகையில் இருந்து சிங்கம் வெளியேறிவிட்டது; இனி வேட்டை தான். அதிமுகவின் தலைமைதான் சரி இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். யாருக்கும் தேமுதிகவினர் சளைத்தவர்கள் அல்ல.

 

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தோல்வி அடைவார். சாதியை பற்றி எனக்கு தெரியாது. சாதியைப்பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன். ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக சீட்டை தேமுதிகவினர் பறிப்பார்கள். இதுவரை சாணக்கியன் ஆக இருந்தது போதும், இனி தேமுதிக சத்திரியன் ஆக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Right Menu Icon