அமமுக தேர்தல் அறிக்கை 12ம் தேதி வெளியீடு! சலுகை மழை இருக்குமா?
அமமுகவின் தேர்தல் அறிக்கை, வரும் 12ம் தேதி வெளியிடப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக, திமுகவுக்கு போட்டியாக, தேர்தல் அறிக்கையில் சலுகை மழை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை வேகப்படுத்தியுள்ளன. தொகுதிப் பங்கீடு என்ற முதல்கட்ட பணிகள் முடிந்து, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு என்ற அடுத்த கட்டத்திற்கு அரசியல் கட்சிகள் நகரத் தொடங்கிவிட்டன.
தமிழக தேர்தல் களத்தில், அதிமுகவுடன் முதல் ஆளாக தொகுதி உடன்பாடு செய்து கொண்ட பாமக தான், தேர்தல் அறிக்கை வெளியீட்டிலும் முந்திக் கொண்டது. திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி .வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையும் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
இருபெரும் கட்சிகளான அதிமுக – திமுக இரண்டுமே, தேர்தல் அறிக்கை வெளியிடும் முன்பே, சில சலுகைகளை அறிவித்து, வாக்காளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 என்று ஸ்டாலின் அறிவித்தார். அதிமுக சும்மா இருக்குமா? முதல்வர் பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, அத்துடன் ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர் இலவசம் என்று அறிவித்தார்.
இந்த சூழலில், செலவு செய்ய தயங்காத டிடிவி தினகரனின் அமமுகவும், 12ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியக் கனவுகளை வென்றெடுக்கப் போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்பு பொதுக்கூட்டம் வரும் 12.03.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். இப்பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளார்கள். இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன சலுகை அறிவிப்புகள் இடம் பெறுமோ என, அதிமுக – திமுக தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து வாக்காளர்கள் ஆர்வமுடன் இருக்கும் சூழலில், டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






