எங்கிருந்தாலும் வாழ்க… தேமுதிக விலகல் குறித்து அதிமுக கருத்து!
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சூட்டோடு, அக்கட்சியை கடுமையாக எல்.கே. சுதீஷ், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் விமர்சனம் செய்த நிலையில், தேமுதிகவினர் எங்கிருந்தாலும் வாழ்க என்று, அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இன்று யாரும் எதிர்பாராத திருப்பமாக, அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக முறித்துக் கொண்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படததால், கடைசியில் ‘ச்சீ ச்சீ இந்த பழம புளிக்கும்’ என்ற ரீதியில், தேமுதிக விலகிக் கொண்டது. அத்துடன், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் சாபம் விட்டார்.
இதேபோல, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என்றும், குகையில் இருந்து சிங்கம் புறப்பட்டுவிட்டதாகவும் கொக்கரித்தார். இதுவரை சாணக்கியன் ஆக இருந்தது போதும், இனி தேமுதிக சத்திரியன் ஆக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.
அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த இருவர் குறித்து, அதிமுக தரப்பில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல், கூட்டணியில் இருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானது. கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவிற்கு தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தியை காட்டுவதற்கு அநாகரீக கருத்துக்களை கூறக்கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவதை ஏற்க முடியாது. எனக்கும் தேமுதிகவை வாங்கு வாங்கு என்று வாங்கத் தெரியும். வெளுத்து வாங்கத் தெரியும். ஆனால், அப்படி செய்யமாட்டேன். நாகரீகம் தெரியும்.
வரும் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று சொல்வதற்கு, சுதீஷ் என்ன ஜோதிடரா..? 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிவே வெற்றி பெறும். தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அம்மாவும், அதிமுகதான். தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லை என்றால் அதிமுக பதிலடி கொடுக்கும்.
தேமுதிகவின் செல்வாக்கு, வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டுப்பெறுவதுதான் புத்திசாலித்தனம். தேமுதிக அப்படி செயல்படவில்லை என்றால் என்ன செய்ய முடியும்..?
அதிமுகவை விமர்சனம் செய்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசுவதை பொருட்படுத்தவில்லை. கூட்டணியில் இருந்த போதே சுதீஷ் பேசிய பேச்சுக்களை பொறுத்துக் கொண்டோம். கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.






