தனித்து போட்டி என்று அறிவித்த கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு!
வரும் தேர்தலில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த காமெடி நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவருமான கருணாஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு 3 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 6, காங்கிரஸ் – 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 6 ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும், சிறு கட்சிகளான வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு மக்கள் தேசியக்கட்சி மற்றும் கடைசி நேரத்தில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆகியவற்றுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
இச்சூழலில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று மதியம் 1 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில், திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வோம் என்றார்.
இன்று மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளார். ஆதரவு கடிதம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திமுகவிடம் வழங்கப்பட்டது. கடந்த தேர்தலில் தமிமுன் அன்சாரி, அதிமுக அணியில் இருந்தவர்.
அதேபோல், நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ், அண்மையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்; அவர் தற்போது, தனது முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி, வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த அவர், தனது கட்சி வரும் தேர்தலில் 84 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





