--- --:--:-- --

25 தொகுதிகள் தந்தால் அதிமுகவுடன் உடன்பாடு… தேமுதிக திட்டவட்டம்!

admk dmdk

அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் தந்தால், உடன்பாடு செய்து கொள்ள தயாராக இருப்பதாக, தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே உள்ள நிலையில், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னமும் உடன்பாடு எட்டப்படாத நிலை உள்ளது. திமுக தரப்பில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் இன்னமும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

 

ஆளும் அதிமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், அதிமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு இழுபறியாக இருப்பதோடு, கூட்டணியில் தேமுதிக தொடர்கிறதா என்பது இன்னமும் உறுதியாகாத நிலையே உள்ளது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக தலைவர்கள், அதிமுகவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது: இதுவரை அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேமுதிக தலைவர் கேட்ட தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆனால், அதிமுக தொகுதி குறைவாக சொல்கிறது.

 

கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜய்காந்த் மற்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்து வருகின்றனர். இன்றுவரை அதிமுகவுடன்தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எண்ணிக்கை முடிவான பின்புதான் தொகுதி குறித்து பேச முடியும்.

 

2011-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது, 41 தொகுதி தேமுதிக சார்பில் கேட்கப்பட்டது. இதனைபோன்று, இந்த முறையும் 41 தொகுதி கேட்டோம். ராஜ்யசபா சீட் கேட்டது உண்மைதான். சீட் கொடுப்பதாக அதிமுக சொல்லியுள்ளது. இன்னும் 2 நாளில் பேச்சுவார்த்தை முடிவடையும். 41 தொகுதிகள் நாங்கள் கேட்டோம். குறைவாக இடம் கேட்கும்படி அதிமுக கூறியது. தற்போது 25 தொகுதி வரை நாங்கள் கேட்டுள்ளோம். அதை கொடுக்க அதிமுக முன்வந்தால், உடனே உடன்பாடு செய்து கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார்.

Leave a Reply

Right Menu Icon