அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது! எடப்பாடியில் இ.பி.எஸ்.; போடியில் ஓ.பி.எஸ்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி, போடியில் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட் அதிமுக சார்பில் பிப்ரவரி 24ம் தேதி முதல், மார்ச் 3ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன் பின்னர், நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விருப்ப மனு அளித்தவர்களை மாவட்டம் வாரியாக வரச்சொல்லி, முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழுவினர் நேர்காணல் செய்தனர்.
ஒரே நாளில் 8200 பேரை தனித்தனியாக நேர்காணல் செய்வது சாத்தியமற்றது என்பதால், மாவட்ட வாரியாக குழுவாக அமரச் செய்து, நேர்காணல் நடைபெற்றது. 8200 பேரை 15 பிரிவுகளாக பிரித்து நேர்காணல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நேர்காணல் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது.
அதிமுக தரப்பில் நேர்காணல் முடிந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக தலைவர்கள், இன்று காலையில் இருந்து தீவிர ஆலோசனை செய்தனர். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் கலந்துரையாடி, முதல்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்தனர். அதன்படி, தற்போது அதிமுக வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமி மீண்டும் போட்டியிடுகிறார். போடி- துணை முதல்வர் பன்னீர்செல்வம், ராயபுரம் – அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் – அமைச்சர் சி.வி. சண்முகம், நிலக்கோட்டை – தேன்மொழி, ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 6 பேருமே தற்போது இதே தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





