நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
நியூசிலாந்தில், ரிக்டர் அளவில் 7.5 என்றளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியின் வடக்குத் தீவின் கரையோரத்தில் இன்று மாலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. கடலில் ராட்சத அலைகள் எழும்பின.
கடுமையான நிலநடுக்கம் என்பதால், சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தியது. எனினும், இதுவரை எந்த பாதிப்பு குறித்தோ, உயிர்ச்சேதம் குறித்தோ எவ்வித தகவலும் இல்லை.
கடந்த மாதம் 10ம் தேதியும் நியூசிலாந்தில் இதேபோல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், அப்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





