வேற்று கிரக உயிர்கள் ‘ஊதா’ நிறத்தில் இருக்கலாம்..!
பூமி என்றாலே நம் நினைவுக்கு வருவது ‘வெளிர் நீல புள்ளி’ மற்றும் அதன் பசுமையான நிலப்பரப்பும்தான். ஆனால், விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களில் உயிர்கள் பச்சை நிறத்திற்குப் பதிலாக ஊதா (Purple) நிறத்தில் இருக்கலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பூமியில் உள்ள தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் ஒளிச்சேர்க்கை முறைக்கு ‘குளோரோபில்’ (Chlorophyll) என்ற நிறமியை பயன்படுத்துகின்றன.
இவை சிவப்பு மற்றும் நீல நிற ஒளியை உறிஞ்சி, பச்சை நிற ஒளியைப் பிரதிபலிப்பதால் பூமி பச்சையாக தெரிகிறது. கார்னெல் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, குறிப்பாக ‘சிவப்பு குள்ள நட்சத்திரங்களை’ (Red Dwarf Stars) சுற்றி வரும் கிரகங்களில் உயிர்கள் முற்றிலும் மாறுபட்ட உயிரியல் அமைப்பைக் கொண்டிருக்கலாம். அந்த கிரகங்களில் உள்ள பாக்டீரியாக்கள் குறைந்த ஆற்றல் கொண்ட அகச்சிவப்பு கதிர்வீச்சை (Infrared radiation) பயன்படுத்தி உயிர்வாழக்கூடும்.
பூமியில் ஏற்கனவே இருக்கும் ‘ஊதா பாக்டீரியா’ (Purple bacteria) போன்ற உயிரினங்கள், அங்குள்ள சூழலில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இந்த ‘ஊதா நிற உலகம்’ என்பது கற்பனை அல்ல. சுமார் 240 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நமது பூமிகூட ஊதா நிறத்தில்தான் இருந்திருக்கலாம் என மேரிலாண்ட் பல்கலை. ஆய்வு கூறுகிறது. அப்போது ‘ரெட்டினல்’ (Retinal) என்ற மூலக்கூறு ஆதிக்கம் செலுத்தியது. இது பச்சை ஒளியை உறிஞ்சி, ஊதா மற்றும் சிவப்பு ஒளியைப் பிரதிபலித்தது. பின்னாளில்தான் ஆக்சிஜன் அளவு அதிகரித்தபோது குளோரோபில் (பச்சை) உருவாகி பூமியை ஆக்கிரமித்தது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ‘மிகப் பெரிய தொலைநோக்கி’ போன்ற நவீன கருவிகள் மூலம் வேற்று கிரகங்களில் உள்ள இத்தகைய ‘ஊதா நிற கைரேகைகளை’ கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறைந்த ஆக்சிஜன் மற்றும் சிவப்பு நிற ஒளி அதிகம் உள்ள கிரகங்களில் ஊதா நிற பாக்டீரியாக்கள் செழித்து வளர ஏதுவான சூழல் உள்ளது. எனவே, இனிமேல் வேற்று கிரகங்களில் உயிர்களைத் தேடும்போது ‘பச்சை’ நிறத்திற்குப் பதிலாக ‘ஊதா’ நிறத்தைத் தேட வேண்டியது அவசியமாகிறது. வேற்று கிரக வாசிகள் என்றாலே ‘பச்சை நிற மனிதர்கள்’என்று கற்பனை செய்யும் காலம் மாறி, அவர்கள் ஊதா நிற உலகில் வாழும் உயிரினங்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.





