--- --:--:-- --

குடும்பத்துக்குள் துரோகிகள்! டிடிவி தினகரன் மீது திவாகரன் பாய்ச்சல்!

divakaran 01

சசிகலாவுக்கு துரோகிகள் வெளியில் இல்லை. அவருக்கான துரோகிகள் குடும்பத்தில் தான் உள்ளனர் என்று, சசிகலா அண்ணன் திவாகரன் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, திடுதிடுப்பென அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிக்கை விட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். குறைந்த அவகாசமே இருப்பதால், இம்முறை தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டாம், அது அம்மா ஜெயலலிதாவின் அதிமுகவை பலவீனப்படுத்தும் என்று, தினகரனிடம் சசிகலா கூறி வந்ததாகவும், அதை அவர் ஏற்காததால் இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.

 

இந்த சூழலில்தான், இனி அரசியல் கிடையாது என்று ஒரே போடாகப் போட்டுள்ளார் சசிகலா. சசிகலாவின் அறிவிப்பை கே.பி,.முனுசாமி, பாஜக தலைவர் எல்.முருகன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். எனினும், முதல்வர் பழனிச்சாமியோ, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

 

இந்த நிலையில், சசிகலாவின் இந்த முடிவு குறித்து, அவரது அண்ணன் திவாகரன் கூறியிருப்பதாவது: சசிகலா ஒரு வீராங்கனை. அவர் சரியான நேரத்தில், போர்க்களத்தில் இிருந்து விலகியுள்ளார். அவரது முதுகில் குத்துவதற்கு துரோகிகள் கூட்டம் உள்ளது என்பதை அறிந்து தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

 

அரசியல் விலகல் என்ற சசிகலாவின் முடிவை நான் வரவேற்கிறேன். அவருக்கு துரோகிகள் வெளியில் இல்லை. அவரது துரோகிகள் குடும்பத்தில்தான் உள்ளனர். டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை அறிவித்துள்ளார். டிடிவி தினகரன்தான் முதல்வர் வேட்பாளர், அமமுக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என்று தினகரன் கூறியது சிறுபிள்ளைத் தனமானது.

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சி நடந்தபோது, தினகரனின் இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சு அதிமுக பேச்சுவார்த்தையில் விரிசலை கொண்டு வந்துள்ளது. இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா விருப்பப்படி அதிமுக வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்; அதுதான் என் விருப்பமும் என்று திவாகரன் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon