--- --:--:-- --

தேமுதிக தனித்துப் போட்டியா? அதிமுகவிடம் கெஞ்சமாட்டோம் என சுதீஷ் காட்டம்

LK suthish

கூட்டணிக்காக அதிகமுதான் நம்மை கெஞ்சுகிறது; நாம் அவர்களை கெஞ்சவில்லை என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் காட்டமாக பேசியுள்ளார். இதன் மூலம், அதிமுக உடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொள்ளவிருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

 

அதிமுக கூட்டணியில் பாமகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படவில்லை. தேமுதிகவுடன் ஆரம்பத்தில் இருந்தே, அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் பேச்சு நடத்தி வந்தனர். தங்களுக்கு 41 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று தேமுதிக கேட்டது. அதிமுகவோ, 10 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்தது.

 

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தங்களுக்கு 25 தொகுதிகள் என்று வேண்டுமென்று தேமுதிக இறங்கி வந்தது; ஆனால், 12 தொகுதிக்கு மேல் கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறிவிட, தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேநேரம், கூட்டணியில் தேமுதிகவும் இருந்தால்தான் நமக்கு பலம் என்று, முதல்வர் எடப்பாடி கருதினார்.

 

எனவே, நேற்றுமாலை நட்சத்திர ஓட்டலில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தேமுதிக தரப்பில் துணை பொது செயலாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இந்த பேச்சுவார்த்தையில் மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும், 20 தொகுதிகளுக்கு குறையாமல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவினர் சம்மதிக்கவில்லை. இதனால் அதிமுக, தேமுதிக பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. அத்துடன், இன்றுமாலை நடைபெறவிருந்த அதிமுக- தேமுதிக பேச்சுவார்த்தையும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இந்த சூழலில், தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எல்.கே. சுதீஷ் பேசும்போது, 2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வர தயாராக இருப்பதாக நிறைய கட்சிகள் கூறுகின்றன. மாநிலங்களவை சீட்டுக்காக தேமுதிக ஆசைப்படவில்லை. கூட்டணிக்காக அதிமுகதான் நம்மை கெஞ்சுகிறது; நாம் அவர்களை கெஞ்சவில்லை என்றார்.

 

அவரது இந்த ஆவேசப்பேச்சு, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டதை காட்டுவதாகவே தெரிகிறது. மேலும் சுதீஷ் இவ்வாறு பேசியிருப்பது, அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon