மு.க. ஸ்டாலின் பிறந்ததினம் இன்று! கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வணங்கினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 68 வயதை நிறைவு செய்து, 69 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில், மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் கருணாநிதியின் நினைவிடம், பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். எனவே, இந்த பிறந்தநாளை திமுக தொண்டர்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிறந்தநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 1ஆம் தேதி, எனது பிறந்தநாள். தமிழ் சமுதாயத்துக்காக என்னை நானே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருவதில், மேலும் ஒரு ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கிறேன். எந்த ஒரு மனிதரின் பிறந்தநாளையும் அவர் கொண்டாடுவதை விட அடுத்தவங்க கொண்டாடும் அளவுக்கு வாழ வேண்டும் என்று சொன்னார் கருணாநிதி.
அப்படித்தான் இந்த தமிழ் சமுதாயத்துக்காக 16 வயதில் இருந்து கடந்த 50 ஆண்டுகாலமாக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். பிறந்தநாள் என்பதை வெறும் கொண்டாட்டத்துக்கான நாளாக மட்டுமே நான் கருதுவது இல்லை. அது அடுத்தவங்களுக்கு பயன்பெறும் நாளாக அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்.
பிறந்தநாள் விழாவின் போது ஏழை எளிய மக்களுக்கு தேவையானதை கொடுங்கள். மாணவ-மாணவிகளுக்கு எழுது பொருட்கள், குறிப்பேடுகள் கொடுங்கள். இலவச மருத்துவ முகாம்களை நடத்துங்கள். ரத்ததானம் செய்யுங்கள். கண்தானம் செய்யுங்கள். இதன் மூலமாக மக்கள் காட்டும் நன்றி புன்னகைக்கு இணையான வாழ்த்து வேறு எதுவும் இருக்க முடியாது.
இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க இருக்கிறது. தி.மு.க. அரியணையில் அமர இருக்கிறது. கோட்டையை கைப்பற்ற இருக்கிறது. மக்கள் நமக்கு வழங்க இருக்கிற மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் அமைப்போம். மக்கள் கோரிக்கைகளை செயல்படுத்துகிற அரசாக இருக்கும்.
கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமான அரசாக நமது தி.மு.க. அரசு அமையும். நமக்கான நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு எனது பிறந்தநாள் செய்தி என்று கூறியுள்ளார்.






