சசிகலா குறித்த விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்..!
சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெயானந்த் திவாகர் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் சசிகலாவின் சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும் அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை திரும்ப பெறவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது. பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது கண்டனத்திற்கு உரியது எனவும் திவாகரன் தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை பெரிதும் மதிக்கின்ற தமிழ் சமூகத்தின் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தம் அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்ணியத்திற்கும், திமுகவுக்கும் ஒருநாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சாட்சி என்று விமர்சித்துள்ளார்.
சசிகலாவை விமர்சனம் செய்தது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியது என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் இந்த மாதிரியான விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.







