லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள சுற்றுச்சூழல் அதிகாரி..!
ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருடைய வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடங்கியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் பணமும், 3 கிலோ வெள்ளி பொருட்களும் சிக்கியுள்ளன. 10 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதான விசாரணை தொடரும் நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே பாண்டியனின் லாக்கர்களில் சோதனை செய்ய வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.
பாண்டியனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.






