தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில் நாளை மறுநாள் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வந்துவிடும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் நாளை மறுநாள் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்க ஈடுபட்டுள்ள விசைப்படகுகள் கரை திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 210 படகுகளை கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் பத்திரமாக கரைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.







