உதகையில் உணவை தேடி பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை..!
உதகை அருகே உணவைத்தேடி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டுயானை யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வெளியேறியது. நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்காக அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
கொரொனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி மூடிக் கிடக்கிறது. ஒரு சில ஆசிரியர்களும் அலுவலர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து கொண்டுள்ளனர். அங்கு அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது உணவு தேடி புலி, சிறுத்தை, காட்டெருமை, யானைகள் போன்றவை கிராமப் பகுதிக்குள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரண்டு ஆண் யானை ஒன்று உணவைத்தேடி வாழைத்தோட்டம் கிராமத்துக்குள் வந்தது. கிராமத்தில் உணவு எதுவும் கிடைக்கவில்லை. காட்டு யானை அரசு பள்ளியின் வாயிலைத் திறந்து உள்ளே சென்றது.
பள்ளிக்குள் யானை வருவதை கண்ட ஊழியர்கள் மிரண்டு போனார்கள். பள்ளி வளாகத்திற்குள் சுமார் ஒரு மணிநேரம் சுற்றி வந்த யானை யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வெளியேறியது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வழித்தடத்தை மறைத்து கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் பள்ளி வளாகத்திற்குள் யானை வந்து சென்றதாக வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.






