தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு..! ஒரு தொற்று கூட இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் உயிரிழந்தோர் 18 பேர் என்ற நிலையில், தமிழகத்தில் ஒரு கொரோனா தொற்று பாதிப்பு நோயாளி கூட இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 5 வது நாளாகவும் 2 ஆயிரத்திற்கும் கீழாக தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1652 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2314 ஆகும் .இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 15,085 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் தினசரி நிகழும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 11,513 ஆக உள்ளது. சென்னையில் இன்று 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.09 லட்சமாக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 112, கோவையில் 170 என இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று பாதிப்பு நூறுக்கு மேலாக பதிவாகியுள்ளது. எஞ்சிய பிற மாவட்டங்களில் நூறுக்கு கீழாகவே இன்றைய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு ஒன்று கூட பதிவாகாத நிலையில், இதுவரை பாதிக்கப் பட்ட 2228 பேரில் 21 பேர் மட்டும் உயிரிழந்த நிலையில், மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் திகழ்கிறது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






