--- --:--:-- --

முதல்வர் எடப்பாடியை புகழ்ந்தும் மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள்…! கிழித்தெறிந்த திமுகவினர்…! திருப்பூரில் பரபரப்பு!!

24cae447-767a-4c49-ac0f-c21c2312b723

திருப்பூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் அவருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டு விமர்சித்தும் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை திமுகவினர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முக்கிய இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே இப்போதே போட்டா போட்டி தொடங்கி விட்டது. அதிமுகவில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை முன்னிலைப்படுத்தி அக் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

 

மேலும் அதிமுகவுக்கு முதல் முக்கிய எதிரியான திமுகவை இப்போதே கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர். அதிலும் இந்தத் தேர்தலில் அடுத்த முதல்வர் யார்? என்பதில் எடப்பாடி Vs மு.க.ஸ்டாலின் இருவருக்குமிடையே தான் போட்டியே என்பதால் மு.க.ஸ்டாலினை குறிவைத்தே அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து பெரும் போஸ்டர் யுத்தமே தொடங்கியுள்ளனர்.

கோவையில் சில நாட்களுக்கு முன் மு.க.ஸ்டாலினை விமர்சித்து எக்கச்சக்கமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் திமுகவினர் ஆத்திரமடைந்து போராட்டத்திலும் ஈடுபட்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் திருப்பூரில் எடப்பாடி பழனிசாமியையும், மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களோடு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சியுடனும், மு.க.ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் காட்சியளிப்பதையும் ஒப்பிட்டு உழைப்பா? நடிப்பா? என்றும் மற்றொரு போஸ்டரில் விவசாயி வேடத்தில் எடப்பாடியையும், தனது மகன் உதயநிதியுடன் மு.க.ஸ்டாலின் இருப்பதை போட்டு மக்கள் ஆட்சியா? குடும்ப ஆட்சியா? என்ற வாசகங்களுடன் திருப்பூரில் அதிமுகவினர் ஏராளமான போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

 

அதிமுகவினர்  புகார்
அதிமுகவினர்  புகார்

அதிமுகவினர் ஒட்டிய இந்தப் போஸ்டர்களை திமுகவினர் இன்று காலை முதலே வீதி வீதியாகச் சென்று கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திமுகவினரின் இந்தச் செயலால் கொதித்தெழுந்த அதிமுகவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

 

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், போஸ்டரில் உழைப்பா? நடிப்பா? என்றும், மக்கள் ஆட்சியா? குடும்ப ஆட்சியா? என்றும் உண்மையைத்தான் கூறியிருந்தோம். இதற்கு பதிலளிக்க திராணியில்லாத திமுகவினர், இன்று காலை முதல் அந்தப் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர். எங்கள் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவுறித்தலின் பேரில், போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது போலீசில் புகார் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon