7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசின் அதிரடியை தொடர்ந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!!
ஒரு வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். 45 நாட்களுக்கும் மேலாக ஆளுநர் காலதாமதம் செய்த காரணத்தால் தமிழக அரசே நேற்று அவசர அரசாணை பிறப்பித்தது. இந் நிலையில், வேறு வழியின்றி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவே தெரிகிறது.
உள்ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா கடந்த செப்டம்பர் 15-ந் தேதி சட்டப்பேரவையில் நிறைவேறி, அன்றே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரோ உடனடியாக ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வும் தொடங்க இருந்த நிலையில், இந்தாண்டு 7.5% உள்ஒதுக்கீடு கிடைப்பது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டங்களும் நடைபெற்றன.
இதனால் தமிழக அரசுக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டது. 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் ஆளுநரைச் சந்தித்து உடனே ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை வைத்தும் அவர் செவிசாய்க்கவில்லை. தாம் ஆலோசித்து முடிவெடுக்க இன்னும் 4 வார காலம் ஆகும் என ஆளுநர் தெரிவித்ததும் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், இந்த 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநரின் ஒப்புதல் இன்றியே தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப் படி, மசோதாவுக்கு ஆளுநர் காலதாமதத்தை காரணம் காட்டி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு .
ஆளுநர் ஒப்புதல் இன்றி, துணிந்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் இந்த திடீர் முடிவுக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக ஆளுநரும் இந்த இன்று மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசின் கருத்து குறித்து ஆளுநர் கடந்த 26-ந்தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று பதில் அளித்ததாகவும், அதன் பேரில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை வெளியிட்டதால் ஏற்பட்ட நெருக்கடியால், ஆளுநர் வேறு வழியின்றி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவே தெரிகிறது. இதன் மூலம் இந்த மசோதா உடனடியாக சட்டமாகிறது. எனவே இந்தாண்டே மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கிடைப்பதில் எந்த தடையும், சட்டச் சிக்கலும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது..
📱 Share on WhatsApp 𝕏 Share on X





