அரசியலுக்கு வா தலைவா..! இப்போ இல்லைனா எப்போ? ரஜினி வீடு முன் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது சந்தேகமாகிப் போன நிலையில், அவரது போயஸ் வீடு முன் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. இப்போ இல்லைனா எப்போ என்ற வாசகங்கள் அடங்கிய டி சர்ட், பதாகைகளுடன் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவுகிறது.
ரஜினி வெளியிட்டது போன்று அவரது பெயரில் ஒரே ஒரு கடிதம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக, அந்தக் கடிதம் தம்முடையது அல்ல; ஆனால் அதில் உள்ள விஷயங்கள் உண்மை தான் என ஒரே ஒரு டுவீட் போட்டார் ரஜினி. இந்த ஒரே ஒரு டுவீட் மூலம், எப்பொழுதும் போல ரஜினி விவகாரம் தமிழகம் முழுவதும் தீயாய் பற்றிக் கொண்டு பரபரப்பாகி விட்டது.
இதன் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவ்வளவுதான். இனி அவர் அரசியலுக்கு வருவது சந்தேகம் தான் என்ற ரீதியில் விவாதங்கள் சூடு பறக்கின்றன. வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் நினைப்பை ஒரேயடியாக மூட்டை கட்டப் போகிறார் ரஜினி என்றெல்லாம் பேச்சாகி சூடு பறக்கிறது.
இதனால் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக கால் நூற்றாண்டுக்கும் மேலாக தவமிருக்கும் அவரது ரசிகர்கள் தான் பெரும் அப்செட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வளவு காலம் பொறுத்திருந்த நிலையில், ரஜினி திடீரென தனது அரசியல் முடிவை வேறுவிதமாக எடுத்துவிடக் கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வருத்தமும், ஆதங்கமுமாக உள்ளதாகத் தெரிகிறது.
இதனால் இன்று காலை முதலே ரஜினியின் போயஸ் இல்லம் முன் ஏராளமான ரசிகர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் குவியத் தொடங்கினர். ரஜினி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமது ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் பிரவேசம் தொடர்பாக உதிர்த்த அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்.. இப்போ இல்லைனா எப்போது.. என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட் அணிந்தும், பதாகைகளை தாங்கியும் குவிந்துள்ளதால் ரஜினியின் போயஸ் இல்லம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இப்போதைய கேள்வி எல்லாம், அரசியல் பிரவேசமா ? இல்லையா? என்பதில் ரஜினி என்ன மாதிரி திடமான முடிவெடுக்கப் போகிறார் என்பதாகவே உள்ளது.






