மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனே வழங்க வலியுறுத்தியும், ஆளுநருக்கு அழுத்தம் தராத தமிழக அரசின் மெத்ததை்தை கண்டித்தும் கிண்டி ஆளுநர் மாளிகை முன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. இதனால் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து சட்டப்பேரவையில் கடந்த கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்த நிலையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தீர்மானம் நிறைவேறியது.
ஆனால் இந்த 7.5 % இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தராததால் சர்ச்சையானது.ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. இதனால் தமிழக அரசுக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. அமைச்சர்கள் 5 பேர் ஆளுநரைச் சந்தித்து உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.
மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர் புரோஹித், மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி முடிவு எடுக்க தமக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்தப் பதிலுக்கு தமிழகத்தில் மேலும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க கோரியும், தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகை முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று ஆளுநர் மாளிகை முன் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட திமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு அங்கு செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலுக்கு சற்று தூரத்தில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.







