நவம்பரிலும் கொரோனா ஊரடங்கு தொடருமா? மேலும் என்ன தளர்வுகள்? 28-ந் தேதி முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து வரும் 28-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனர் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்த கட்டமாக இந்த ஊரடங்கு ஒல்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டே வருகிறது. ஆனால் முழு ஊரடங்கில் பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தற்போது தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து முழுமையாக இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளும் ஓடத் தொடங்கி விட்டன. வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா இடங்கள், பொழுது போக்கு, திருமண மண்டபங்கள் போன்றவை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றன. வழக்கமான பயணிகள் ரயில் போக்குவரத்து சீராகாத நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன விமான சேவையும் அதே போல் ஓரளவுக்கு நடைபெறுகிறது.
ஆனால் தமிழகத்தில் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இன்னும் தியேட்டர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பயணிகளுக்காக புறநகர் மின்சார ரயில் சேவையும் தொடங்கப்படவில்லை. சென்னையில் மெரினா கடற்கரைக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதியுல்லை.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. அடுத்த மாதமும் ஊரடங்கை தொடர்வதா? கூடுதலாக என்னென்ன தளர்வுகளை அறிவிப்பதா? என்பது குறித்து வரும் 28-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். அன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், பாதிப்பு நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கூடுதலாக தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை நடத்திய பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







