மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசனுக்கு கொரோனோ பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி
மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ், அரசியல்வாதிகளை விட்டு வைத்த பாடில்லை. தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் என பலரும் இத்தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இதில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார் ஆகியோர் உயிரிழந்த சோகமும் அரங்கேறியது.
இந்நிலையில் மதுரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யான சு. வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் மக்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி, தனது டுவிட்டர் பதிவில், இன்று எனக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.







