--- --:--:-- --

வெங்காயம் விலை “கிடுகிடு” உயர்வுக்கு பதுக்கலே காரணம்.. புதிய வேளாண் சட்டத்தால் இன்னும் அதிகரிக்கும்.. மு.க.ஸ்டாலின் அபாய எச்சரிக்கை

drh

வெங்காயம் பதுக்கப்பட்டதே அதன் விலை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம் என்றும், அதிமுக அரசு ஆதரித்த மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும்; இதற்குப் பிறகாவது வேளாண் சட்டத்தை அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் வெங்காய விலையைக் குறைக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பண்டிகை கால நேரத்தில், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து ஏழை, நடுத்தர குடும்பங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலை கிலோ ரூ.100 ஐ தாண்டியுள்ள நிலையில் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுவதால் மேலும் அச்சம் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் வெங்காயம் விலை உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விலை உயர்வுக்கு பதுக்கல் தான் காரணம் என்றும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மேலும் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 

சாதாரண சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாம் வெங்காயத்தைப் பதுக்கியதால் இன்றைக்கு அதன் விலை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு, கிடுகிடுவென உயர்ந்து – தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகளின் வேதனைக் கண்ணீர். மறுபுறம், வெங்காயத்தின் தாங்க முடியாத விலை உயர்வால் தாய்மார்கள் பெருக்கிடும் கண்ணீர். இத்தகைய கண்ணீரில் களிநடம் போடுகிறது எடப்பாடி அ.தி.மு.க. அரசு.

 

அ.தி.மு.க. அரசு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்போம் என்றாலும், அனைவருக்கும் வெங்காயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!

 

இப்போதே வெங்காயம் கிலோ 130 ரூபாய் வரை விற்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. அரசு ஆதரித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் எவ்வளவு வேண்டுமானாலும் தேக்கி வைக்கலாம்; இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் விலை ஏறலாம்.

 

மு.க.ஸ்டாலின் அபாய எச்சரிக்கை

 

இந்த அனுபவத்திற்குப் பிறகாவது மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்றும்; வெங்காயத்தை முழுவீச்சில் அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு உரிய போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வெங்காயத்தின் மூலமாக மற்றொரு ஊழலுக்கு வழி கண்டுவிடக் கூடாது எனவும் மு.க.ஸ்டாலின் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon