வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், மீன்சூர், செங்குன்றம், பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகல் நேரத்தில் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தது. செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, பொண்ணெரிகரை, வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பவானிசாகர், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில் அன்னவாசல், சித்தன்னவாசல், மதியநல்லூர், பெருஞ்சினை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






