--- --:--:-- --

வெற்றிவேல் உடல் கொரோனா வழிகாட்டுதல்படி இறுதிச் சடங்கு.. அமமுக தலைமை கழகத்தில் படத்திற்கு டிடிவி தினகரன் கண்ணீர் அஞ்சலி

Screenshot_2020-10-16-12-05-48-950_com.whatsapp

கொரோனா பாதிப்பால் காலமான அமமுக பொருளாளர் உடல், கொரோனா வழிகாட்டுதல்படி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அமமுக தலைமை கழக அலுவலகத்தில் வெற்றிவேலின் உருவப் படத்திற்கு டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல், கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள அவருடைய உடல், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி சுகாதாரத் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்புடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. இதனால் அவரது உடலுக்கு உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

 

இதையடுத்து, சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிவேலின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

கட்சியின் முக்கியப் புள்ளியாக திகழ்ந்த வெற்றிவேலின் மறைவு டிடிவி தினகரனையும் அமமுகவினரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். தமக்கு உற்ற நண்பராகவும் திகழ்ந்த அவரது மறைவு பெரும் இழப்பு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய ருப்பதாவது:

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும், இனிய நண்பருமான வெற்றிவேல் மறைவு, மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அன்பை பெற்றவரும், அமமுக நடத்தி வரும் புனிதப் போரில் ஒரு தளபதியாக களத்தில் நின்றவரான வெற்றிவேல் மறைவு, கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் தனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு . அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அமமுகவினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

வெற்றிவேல் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon