--- --:--:-- --

எதுக்கு வீண் வம்பு.. வழக்கு … நோட்டீஸ்.? ரூ.6.56 லட்சம் சொத்து வரியை மாநகராட்சியில் செலுத்திய ரஜினி

0.2

ராகவேந்திரா மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.6.56 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி வழக்கு தொடர்ந்த விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில் வீண் வம்பு ஏன்? என்று கருதினாரோ என்னவோ ரஜினி இன்று அந்தத் தொகையை மாநகராட்சியில் செலுத்திய அந்த ரசீது சமூக வலை தளங்களிலும் உலா வருகிறது.

 

கொரோனா காலத்தில் 6 மாதமாக தமது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அப்படி மூடிக்கிடந்த மண்டபத்துக்கு சென்னை மாநகராட்சி எப்படி ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பலாம் என்ற ஆதங்கத்துடன் சொத்து வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு எதிராக ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ரஜினி தரப்பை நீதிபதி எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

நோட்டீசுக்கு எதிராக மாநகராட்சியில் முறையீடு செய்து, பதிலுக்கான அவகாசம் உள்ள நிலையில் அவசரப்பட்டு வழக்கு தொடர்ந்தது ஏன்? நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கலாமா? இது என்ன மாநகராட்சி அலுவலமா? என்று சரமாரியாக குட்டு வைத்ததுடன் கடுமையான அபராதம் விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆடிப் போன ரஜினி தாப்பு, உயர் நீதிமன்றத்தில் மன்றாடி வருத்தம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பாகி ரஜினி மீது விமர்சனங்களுக்கு வித்திட்டது.

 

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக ரஜினி இன்று ஒரு டுவீட் செய்திருந்தார். அதில் தமது செயல் தப்புதான் என அவர் ஒத்துக் கொள்வது அந்த பதிவில்,

ராகவேந்திரா மண்டப சொத்து வரி..

நாம் மாநகராட்சியில் மேல் முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறை தவிர்த்திருக்கலாம்.

# அனுபவமே _ பாடம்…

என ரஜினி டுவீட் செய்திருந்தார்.

 

இப்படி டுவீட் செய்த அதே வேளையில் ஏன் இந்த வழக்கு, வம்பு, தும்பு என ரஜினி நினைத்தாரோ என்னவோ, மாநகராட்சி நோட்டீசில் குறிப்பிட்டிருந்த ரூ. 6.56 லட்சம் சொத்து வரியையும் இன்று செலுத்தியுள்ளார்.மாநகராட்சி நோட்டீசில் 15-ம் தேதி (இன்று) இரவு 12 மணிக்குள் வரியை கட்டத் தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இதனால் மேற்கொண்டு மேல் முறையீடு செய்து ஏன் சர்ச்சையை கூட்டுவானேன் என்று நினைத்த ரஜினி, இன்று கல்யாண மண்டபத்திற்கான சொத்து வரி ரூ. 6.56 லட்சத்தை சென்னை மாநகராட்சியில் செலுத்தியுள்ளார்.

 

வரி செலுத்தியதற்கான ரசீதும் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் தாமத கட்டணத்திற்கு அபராதம் 9386 ரூபாய் என்றும், சொத்து வரி ரூ. 646610 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக ரஜினியின் சொத்து வரி விவகாரம் திடீரென விஸ்வரூபமெடுத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தி ஒரே நாளில் புஷ்வாணமாகி விட்டது. இது தான் ரஜினி ஸ்டைல் என்பதோ?

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon