கோவையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத இரண்டே கால் லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அலுவலகத்தில் உள்ள ஆவணக் காப்பக அறை, மின்சாதன பொருட்கள் வைக்கும் அறை, கார் பார்க்கிங் போன்ற இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரத்து 550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சார் பதிவாளர் லதா ராணி உட்பட 4 ஊழியர்கள் மற்றும் நான்கு இடைத்தரகர்கள் ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 23 ஆயிரத்து 380 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இணை சார்பதிவாளர் ஆசைதம்பி மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.







