போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்த ரியாவுக்கு ஜாமீன்..!
போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் இருந்த பாலிவுட் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்திக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் போதை பொருளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்பது சர்ச்சைகளை கிளப்பியது.
இதில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலியும் பாலிவுட் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு முக்கிய அமைப்புகளும் அடுத்தடுத்த கட்ட விசாரணைகளை நடத்தியது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரியா சக்கரவர்த்தி ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரியா சக்கரவர்த்தி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், உரிய உத்தரவின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது. சிறையிலிருந்து வெளிவந்த தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று கையொப்பமிட வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் ஆகிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.







