ஹத்ராஸ் சம்பவம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது..!
ஹத்ராஸ் சம்பவம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உத்திரப்பிரதேச அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட 19 வயது இளம்பெண் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக கதைகள் பெருகி வருவதாகவும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பலியான பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை தூண்டி விடுவதாகவும் உத்திரபிரதேச வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
விசாரணையின் போது பேசிய தலைமை நீதிபதி பாப்டே ஹத்ராஸ் சம்பவம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான சாட்சிகளைப் பாதுகாக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பலியான பெண்ணின் குடும்பத்தார் வாதிட வழக்கறிஞரை நியமிக்கப்பட்டது உள்ளிட்டவை பற்றி விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்திர பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னர் விசாரணை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முறையாக நடப்பது உறுதிப்படுத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.






