பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 பேர் பிடிபட்டது எப்படி?
மேற்கு வங்கம் கேரள மாநிலங்களில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் ஒர்சிதாபாத், கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதன் விளைவாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அல்கொய்தா அமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் வேலை செய்து வந்ததாக விசாரணை மூலமாக தெரிய வந்துள்ளது. அவர்களில் சிலர் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை வாங்குவதற்காக டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்-குவைதா பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் தூண்டப்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது. அவர்களிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இவர்கள் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது மூலம் மிகப்பெரிய தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள் அவர்கள் 9 பேரையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தி காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.






