மதுரையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் தற்கொலை..!
மதுரை பேரையூர் அருகே இளைஞர் தற்கொலை விவகாரத்தில் சாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் என்ற இளைஞர் கடந்த 17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ஜெயகண்ணன், காவலர் புதிய ராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும் ரமேஷ் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரியும் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் மற்றும் உயிரிழந்த ரமேஷ் உறவினர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின்பே நான்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுஜித்குமார் விளக்கம் அளித்தார்.






