பிரதம மந்திரி கிஸான் விகாஸ் திட்டத்தில் கோவையில் 750 தகுதியில்லாத பயனாளர்கள் கண்டறியப்பட்டு உள்ளது – மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல் !!!
கோவை மாவட்டத்தில் 2020-21 ஆண்டுக்கான பிரதம மந்திரியின் கிஸான் விகாஸ் திட்டத்தில் 2 ஆயிரத்து 105 பயனாளிகளில் 543 பேர் தகுதியில்லாத பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.22 லட்சத்தில், ரூ.19.11 லட்சம் அரசின் வங்கி கணக்கில் திரும்பப்பெற்றுள்ளதாகவும், மீதம் உள்ள ரூ. 3 லட்சம் ஓரிரு நாட்களில் திரும்பப்பெறப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும்,வெளி மாவட்டங்களில் வங்கி கணக்கு வைத்திருக்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்த 207 தகுதியில்லாத பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள ரூ.8.28 லட்சம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, பணத்தை திரும்பப்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய ஆட்சியர் திட்டத்தில் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டிய நிலையில் 2 தவணை தொகையான ரூ.4 ஆயிரம் மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,நிலம் இருந்தும் விவசாய நிலமாக இல்லாதது, வரி செலுத்துவோர், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பில் உள்ளவர்கள், ரிசர்வ் சைட் வைத்திருப்போர் என கிஸான் திட்டத்தில் அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளின் கீழ் வராதவர்கள் தகுதியில்லாத பயனாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர்.
கடந்த 10 நாட்களாக மாவட்ட வருவாய், வேளாண் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு இந்த தகவல்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பான தகவல் மாநில வேளாண் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.







