--- --:--:-- --

கோவையில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விபத்து..!இருவர் பலி !!

1.1

கோவையில் பெய்த கனமழையில் மூன்று மாடி கொண்ட வீடு இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை பேரூர் அருகே செட்டி வீதி கே.சி தோட்டம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் பலத்த மழையின் காரணமாக இடிந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியகடை வீதி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இடிபாடுகளில் இருந்து மீட்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தகவலறிந்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்,அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜுனன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

தொடர்ந்து 70 வயதான வனஜாம்மாள், 48 வயதான கவிதா, 45 வயதான மனோஜ், 6 வயதான தன்வீர் ஆகியோர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவனின் தாய் ஸ்வேதா என்ற ஷாலினி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும்,70 வயதான கஸ்தூரிம்மாள்,75 வயதான கோபால்சாமி, 35 வயதான மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கோபாலசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர், மருத்துவக்குழு, மாநகராட்சி, காவல்துறை என 300க்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட 6 பேர்களில் 2 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon