--- --:--:-- --

நெருக்கடிக்கு பணிந்த எடப்பாடி! ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வில் அதிரடி… முதல்வரின் திடீர் மனமாற்ற பின்னணி?

images (1)

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தந்த நெருக்கடிக்கு பணிந்து தமிழக அரசு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தி இருக்கிறது. இதன்மூலம் மக்களின் பாதுகாப்பை அரசு கைவிட்டுவிட்டதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 

இ- பாஸ் ரத்து, போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, நம்மில் பலருக்கு கை விலங்கை கழற்றி விட்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பாடா, இனிமேல் போலீஸுக்கு பயந்து ஒளிந்து செல்ல வேண்டியதில்லை; நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லலாம் என்று, பலரும் நிம்மதி பெருமுச்சு விடுகிறார்கள்.

 

இதற்கு காரணம், கொரொனா என்ற தொற்றால் இதுவரை உலகமே சந்திருக்காத பெரும் துயரமும், அந்த நோயை தடுக்க அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவும்தான். பிறநாட்டுடன் போர் நடைபெற்ற நெருக்கடியான காலகட்டங்களில் கூட இதுபோன்ற ஊரடங்கு உத்தரவையோ, கட்டுப்பாடுகளை மக்கள் சந்தித்ததில்லை. ஆனால், கொரோனா என்ற நோய், நம் எல்லோரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு, பல வாழ்க்கை பாடங்களை சொல்லித் தந்துவிட்டது.

 

இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தலைதூக்க ஆரம்பித்தது. இதை கட்டுப்படுத்த முதலில் ஜனதா ஊரடங்கும், அதை தொடர்ந்து, மார்ச் 24ம் முதல் நாடுதழுவிய ஊரடங்கையும் மத்திய அரசு அறிவித்தது. அன்றைக்கு பிடித்த தோஷம், ஆகஸ்ட் 31ம் தேதியோடு நம்மை விட்டு விலகுகிறது. ஊரடங்கு காலத்தில் அரசு நிர்வாகம், தொழிற்துறை இயங்கவில்லை. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன; கோவில், சினிமா, அரசியல் என்று எல்லாமே முடங்கிப் போயின.

 

தேர்தல் களத்தில் அ.தி.மு.க மட்டுமே

அரசியல் செய்ய முடியாமல் கரைவேட்டிகள் வீட்டுக்குள் முடங்கினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த மாவட்டத்துக்கும் செல்ல முடியவில்லை. ஆனால், முதல்வர் மட்டும் மாவட்டம் தோறும் அரசு விழா என்ற பெயரில் தன் விருப்பத்திற்கு சென்று வந்தார். இதனால் அரண்டு போன எதிர்க்கட்சிகள், டிசம்பர் வரையில் இ-பாஸ் முறையை அமல் செய்து, தேர்தல் களத்தில் அ.தி.மு.க மட்டுமே அரசியல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் கவலையடைய ஆரம்பித்தன.

எனவே, தமிழக அரசின் இ-பாஸ் நடைமுறையை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்க்க தொடங்கின. பொதுமக்கள் நல்லது கெட்டதற்கு உடனே எங்கும் செல்ல முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கின. போதாக்குறைக்கு மத்திய அரசு தன்பங்கிற்கு இ-பாஸ் நடைமுறை வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரத் தொடங்கியது. காரணம், இப்படியே வீட்டுக்குள் மக்கள் முடங்கிக் கிடந்தால் அரசின் கஜானா காலியாகிவிடுமே என்பது மத்திய அரசின் கவலையாக இருந்தது.

 

இதை சமாளிக்க, கடந்த ஆகஸ்ட் 17ல் ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. இதுபற்றி விளக்கம் அளித்த முதல்வர், இ பாஸ் ஏன் அவசியம் என்றால், யார் எங்கே போகிறார்கள் என்ற விஷயம் தமிழக அரசுக்குத் தெரியவேண்டும் அப்போதுதான் கொரோனா பாதிக்கப்பட்டவரை, கான்டாக்ட் டிரேஸ் எனப்படும் தொடர்புத் தடமறிதல் முறையில் கண்டறியலாம் என்றார்.

 

மத்தியில் கடும் அதிருப்தி

ஆனாலும், இந்த நடைமுறையால், முதல்வர் எதிர்பார்த்த எந்த பலனும் ஏற்படவில்லை. வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்க, சமூக வலைதளங்களில் அரசின் அறிவிப்பை பலரும் கிண்டல் செய்தனர். அத்துடன் இ-பாஸ் நடைமுறை கூடவே கூடாது; இது தொழிலாளர்கள் திரும்பவும், தொழில் மேம்பாட்டுக்கும் தடையாக இருக்கும் என்று மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்தது.

 

ஒருபுறம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இடி, மறுபக்கம் மத்திய அரசின் அடி என்று மத்தளம் போல் தமிழக அரசுக்கு இரண்டு பக்கமும் நெருக்கடி. அதுமட்டுமின்றி இ-பாஸ் நடைமுறைக்கு பொதுமக்களின் மத்தியில் கடும் அதிருப்தி இருப்பதையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்கு உணர்ந்திருந்தார். குறிப்பாக வாடகை கார், மேக்ஸி கேப் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் என பலரும் மாவட்டங்களுக்கு இடையேயான இபாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

அடுத்தடுத்த அழுத்தங்களால் திணறிய தமிழக அரசு, வேறுவழியின்றி கடந்த 30ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகள் அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். அதற்கான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும்.

 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துக் கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் தொழிற்சாலைகள், ஐடி மற்றும் தனியார் நிறுவனங்கள், இனி 100 சதவிகித ஊழியர்களுடன் இயங்கலாம். ஷாப்பிங் மால்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% ஊழியர்களுடன் செயல்படலாம். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், இதர விருந்தோம்பல் சேவைகள் அரசின் வழிகாட்டுதலுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் தொழில்துறைக்கு இந்த தளர்வு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை தொடரும். பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு தலங்கள், பூங்காக்கள் செயல்பட தடை தொடரும் என்றும் அரசு அறிவித்தது. இதன்மூலம் மார்ச் 24ம் தேதி அமலுக்கு வந்த தடைகளில் பெரும்பாலாவை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

 

உண்மையை சொல்லப்போனால் கொரொனா அதிகம் பரவாத காலத்தில் மிகுந்த கண்டிப்புடன் ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, கொரொனா அதிக வீரியத்துடன் கிராமங்கள் வரை பரவியுள்ள தற்போதைய காலகட்டத்தில் ஊரடங்கு விதிகளை தளர்த்தி இருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் தொடர்வதுதான் நல்லது என்று மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கருதுகின்றனர்.

 

முதல்வர் மனம் மாறியது எப்படி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 29 ஆம் தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை முடித்துக் கொண்ட பிறகே இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட இ பாஸ் நடைமுறையை நியாயப்படுத்திதான் அவர் பேசி வந்தார். பொதுப்போக்குவரத்தை தொடங்க வாய்ப்பில்லை என்ற பொருளிலும் அவரது பேச்சு இருந்தது. ஆனால், திடீரென அவரது மனம் மாறியது எப்படி? அதன் பின்னணியை பார்ப்போம்.

 

இ பாஸ் நடைமுறையை அரசுக்கு எதிராக திருப்பிவிட்டு எதிர்க்கட்சிகள், மக்கள் மனதில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுவார்களோ என்று அதிமுக அமைச்சர்கள் பலரும் முதல்வரிடம் தங்களது கவலைகளை கொட்டித் தீர்த்தார்களாம். முதல்வரும் அதிமுகவுக்கு எதிராக மக்கள் மனதில் எதிர்க்கட்சிகள் எதையாவது விதைத்துவிடுவார்கள் என்று யோசிக்க தொடங்கினாராம்.

 

இதற்கெல்லாம் மேலாக, மத்திய அரசும் இ பாஸ் விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டே இருந்தது. தமிழக அரசின் நிதி நிலைமையும் சரியில்லை. எனவேதான், இனி மக்கள் பாதுகாப்பு மக்கள் கையில் என்ற முடிவோடு, அரைகுறை மனதுடன் ஊரடங்கு தளர்வுகளுக்கு முதல்வர் சம்மதித்தாக கூறப்படுகிறது.

 

அதேநேரம், தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவல் அதிகரித்தால் எந்த நேரத்திலும் மீண்டும் பழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

 


நம் உயிர் நமது கையில்

எது எப்படியோ, தடைகளை நீக்கிவிட்டார்கள் – இனி கவலைப்பட வேண்டியதில்லை என்று சந்தோஷப்படக்கூடிய தருணம் இதுவல்ல. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டதால் இனி நம் உயிர் நமது கையில்தான். நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வது நமது பொறுப்பாகும்.

 

விமர்சனங்களுக்கு பயந்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளதன் தாக்கம் அடுத்த 2 வாரங்களுக்கு பிறகே தெரிய வரும். தமிழகத்தில் கொரோனா கூடுமா – குறையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon