“இ-பாஸ் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்” அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!
மாநிலத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலங்களுக்கு இடையிலோ செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதை உடனே ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்புடன் கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பொதுப் போக்குவரத்திற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தனியார் வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன் பின்னர், ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த மே மாதத்தில் பொது போக்குவரத்தைத் தவிர்த்து இதர போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தளர்த்தியது. இ-பாஸ் நடைமுறை தேவையில்லை எனவும் மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் பல மாநில அரசுகளும் மாநிலத்திற்கிடையேயான மற்றும் மாநிலத்திற்கு உள்ளேயான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் மற்றும் இ.பாஸ் கட்டாயம் என இன்னமும் நடைமுறைப் படுத்துகின்றன. தமிழகத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி மக்கள் எதிர்ப்பு காட்டிய நிலையில், இ-பாஸ்க்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்கப்படும் என தமிழக அரசு தளர்வை அறிவித்தாலும், மாநிலங்களுக்கு இடையேயான இ-பாஸ் நடைமுறை அப்படியே தொடர்கிறது .
இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இ-பாஸ் முறை விநியோகச் சங்கிலிகளை மோசமாக பாதிக்கும் என்றும் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே மாநிலங்களுக்கிடையேயும், உள்ளேயும் மக்கள் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் இனி இ-பாஸ் அவசியமில்லை என்றும், மாநில அரசுகள் இந்த நடைமுறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து திணிப்பது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதாக கருதப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

cancel e-pass system, home ministry warns all states






