தமிழகத்தில் இன்று 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு…! புதிய உச்சமாக 127 பேர் உயிரிழப்பு..! சென்னையில் பாதிப்பு மீண்டும் ஏறுமுகம்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 127 என பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று 2-வது நாளாக மீண்டும் ஆயிரத்தை கடந்து தொற்று பாதிப்பு 1179 ஆக ஏறுமுகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் கட்டுக்குள் உள்ளதா? குறைந்துள்ளதா? என்று கணிக்க முடியாத அளவுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்கு உள்ளாகவும், தினசரி உயிரிழப்பு நூறை தாண்டியும் பதிவாகி வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5860 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,32,105ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஏறுமுகமாக உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைப்போல் இன்றும் பாதிப்பு ஆயிரத்தை கடந்து 1,179 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,15,444 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், தினசரி தொற்று பாதிக்கப்பட்டோரை விட தினமும் குணமாவோரின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக குறைவாகவே உள்ளது. இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,236 ஆகும். இதனால் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,72,251 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி உயிரிழப்பு கடந்த சில நாட்களாகவே 118, 117/ 119 என 120 -க்கு கீழாக ஊசலாடி வந்த நிலையில் இன்று புதிய உச்சமாக உயிரிழப்பு 127 ஆக உயர்ந்து, இதுவரையிலான பலி எண்ணிக்கை 5,641ஆக உயர்ந்து உள்ளது. இது வரை, தமிழகம் முழுவதும் 35,13,495 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 69,598 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் பாதிப்பு 422 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு 370, கடலூர் 344, கோவை 290, ராணிப்பேட்டை 260, சேலம் 200 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






