“யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சைக்கு ஓ.பி.எஸ். முற்றுப்புள்ளி” 2021-ம் ஆண்டிலும் அதிமுக வெற்றி பெறுவதே இலக்கு என டுவீட்!!
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை வெடித்த நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை திடீரென வெடித்துள்ளது. இந்த சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜூ தான். தேர்தல் முடிந்து எம்எல்ஏக்கள் கூடி முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என சர்ச்சையை அவர் ஆரம்பித்து வைக்க, மறுநாளே எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்ஜித்தார், இதனை ஆமோதிப்பது போல் மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எடப்பாடியாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரோ முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர்கள் பொது வெளியில் பேசுவது தவறு என்றும், இது பற்றி அமைச்சர்கள் தெரிவித்த கருத்து அவர்களின் சொந்தக் கருத்தாக இருக்கலாம் என்றும் கட்சியின் சின்னத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றி காண்போம் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதிமுகவில் திடீர் சலசலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து அதிமுகவின் துணை ஒருங்கணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,தொடர்ந்து 3-வது முறையாக 2021-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு.அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் எனவும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.







