காதலர்களை நடுரோட்டில் முட்டிபோட வைத்து மிரட்டிய கும்பல்..!
வட மாநிலங்களில் வன்முறைக் கும்பலால் காதலர்கள் தாக்கப்படுவது அறிந்திருப்போம். அதேபோல தமிழகத்திலும் ஒரு காதல் ஜோடி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் காதல் ஜோடியை மிரட்டி முட்டி போட வைத்ததோடு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இந்த துணிகர சம்பவம் நெல்லை புறநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டி யில் நடந்துள்ளது. ரெட்டியார்பட்டி அருகே மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தை பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
இந்த இடத்தில் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் வாடிக்கை. காதலர்களுக்கும் இந்த இடம் பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது. அப்படிதான் ஒரு மாலை நேரத்தில் இங்கு வந்த இளம் காதல் ஜோடிகள் சமூக விரோத கும்பலிடம் சிக்கி உள்ளனர்.
காதலர்களை மிரட்டி அந்த கும்பல் பதிவு செய்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதலனை விசாரிக்கும் போது மூன்று பேர் கொண்ட கும்பல் தங்களிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருணாச்சலம் என்பவரை கைது செய்தனர்.







