கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்தடுக்கு உறை கிணறு..!
பழந்தமிழர் பெருமைகளுக்கு சான்றாக பல வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது கீழடி. ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஐந்தடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. பழந்தமிழர்களின் வாழ்வியலையும், தொழில்துறையும் வெளிப்படுத்தும் பொக்கிஷமாக கீழடியில் நடக்கும் அகழ்வாராய்ச்சி விளங்கி வருகிறது.
கீழடி, கொந்தகை, அகரம், மணலி ஆகிய நான்கு இடங்களில் விரிவான முறையில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தொன்மையான மனிதர்களின் வாழ்விட பகுதியாக கருதப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிதாக ஐந்து அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
கூடுதலாக அடுக்குகள் இருக்கலாம் என்பதால் அதனை முழுமையாக தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உறை கிணறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஆறாம் கட்ட ஆய்வில் இதுவரை 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள், விலங்கு எலும்புக்கூடு, தங்க நாணயம், பாசி மணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தோல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆறாம்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைய உள்ளன.







