--- --:--:-- --

திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடம் பிடித்தேனா..? கலகம் செய்கிறேனா..? இல்லவே இல்லை என்கிறார் துரைமுருகன்!!

875

திமுக பொதுச் செயலாளர் பதவி கேட்டு துரைமுருகன் அடம் பிடிப்பதாகவும், கட்சி மேலிடத்துடன் லடாய் செய்து துரைமுருகன் போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதனை மறுத்துள்ள துரைமுருகன், ஆசாங்கு பாசாங்குகளுக்கு தாம் அப்பாற்பட்டவன் என விளக்கமளித்துள்ளார்.

 

திமுக தலைவராக 50 ஆண்டுகளாக இருந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அதே போல் கட்சியின் அடுத்த முக்கியப் பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியில் க.அன்பழகன் 45 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின், மு.க.ஸ்டாலின் தலைவராகி விட்டார். தொடர்ந்து க.அன்பழகனும் கடந்த சில மாதங்களுக்கு முன் மறைந்து விட்டார்.

 

இதனால் திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து முக்கியப் பொறுப்பான பொதுச் செயலாளர் பதவிக்கு யார் ? என்ற கேள்வி எழுந்தது. இதில் திமுகவில் மிகவும் சீனியரான அனுபவமிக்க துரைமுருகன் தான் அடுத்த பொதுச் செயலாளர் என்பது கிட்டத்தட்ட முடிவானது தான். அதனாலேயே பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்தார். கடந்த மார்ச் இறுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், துரைமுருகனை பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திமுக பொதுக்குழு தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இதற்கிடையே திமுக பொருளாளர் பதவியில் துரைமுருகன் தொடர்வார் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் துரைமுருகனுக்கு பொதுச் செயலர் பதவி கிடைப்பது சந்தேகம் எனவும் செய்திகள் பரவி பரபரப்பானது. துரைமுருகனுக்கு பொதுச் செயலர் பதவி கொடுக்க, கருணாநிதி குடும்பத்திலேயே எதிர்ப்பு என்றும் கூறப்பட்டது.

பொதுச் செயலாளர் பதவிக்கு இலவு காத்த கிளிபோல் காத்திருந்த துரைமுருகன், தற்போது அப்பதவி கிடைப்பது சந்தேகம் என்றவுடன், கட்சிக்குள் கலகமூட்ட தயாராகி விட்டார் என்ற செய்திகள் ரெக்கை கட்டின. போதாக்குறைக்கு வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றோர் அடுத்தடுத்து பாஜக பக்கம் பல்டி அடித்து திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல முக்கியப் புள்ளிகள் திமுகவில் இருந்து பாஜகவுக்கு ஜம்ப் ஆகப்போவதாகவும் பரபரப்பாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் பொதுச் செயலாளர் பதவி கேட்டு துரைமுருகன் அடம் பிடித்து வருவதாக வெளியான செய்தி தான் கூடுதல் பரபரப்பாகி விட்டது.

 

ஆனால் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் துரைமுருகன் இன்று விளக்கமாகவும், உருக்கமாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று கருணாநிதியின் 2-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திய பின்பு துரைமுருகன் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையில், துரைமுருகன் கூறியிருப்பது இதுதான். ”பதவியை எதிர்பார்த்து நான் திமுகவிற்கு வரவில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு திமுகவில் கலகம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. பதவிகள் கிடைக்காவிட்டாலும் திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து கோஷமிடுவேன். ஆசாங்கு பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டவன் நான்” என துரைமுருகன் தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon