ஒரு தலைக்காதல்…! மாணவியை பிளேடால் கொலை செய்ய முயன்ற இளைஞர்..!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைலாச புரத்தை சேர்ந்த மாணவி கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோனி ராஜா மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பெண் கேட்டு சென்ற போது மாணவியின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மாணவியை பிளேடால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்கைகொண்டான் பஜார் பகுதியில் சுற்றித்திரிந்த தோனி ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







