கொரொனாவில் இருந்து மீண்ட தம்பதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
ஆந்திர மாநிலத்தில் ஊர் மக்கள் ஒதுக்கி வைத்ததால் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாபுரத்தை சேர்ந்த பனிராஜ், ஸ்ரீஷா தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஆவர்.
பனிராஜ் வெல்ல வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சில வாரங்களுக்கு முன்பு கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த பனிராஜின் தாயார் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் எடுத்துக்கொண்ட பரிசோதனையில் கணவன்-மனைவி இருவருக்குமே கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் வீடு திரும்பினார். அதன்பின் மீண்டும் பனிராஜ் கடைக்கு சென்றார். ஆனால் அக்கம்பக்கத்து வியாபாரிகள் மற்றும் அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் அவர்களிடம் பேசுவதை தவிர்த்து வந்தனர். வாடிக்கையாளர்களும் வராமல் இருந்தனர். கடன் கொடுத்தவர்களும் கடனைக் கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இதனால் மனமுடைந்த தம்பதியினர் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கொரொனாவில் இருந்து மீண்ட பிறகும் ஊர் மக்கள் ஒதுக்கி வைத்ததால் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டது ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






