--- --:--:-- --

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் புரோகித்துக்கு கொரோனா உறுதி…! உ.பி.யில் பாஜக பெண் அமைச்சர் உயிரிழப்பு!!

Amit_Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உபி.யில் பாஜக பெண் அமைச்சர் ஒருவரும் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்து உயிரிழப்பும் அரை லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் இப்போது கொரோனா வைரஸ் பரவல் படு வேகமாகியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு விஐபிக்கள் பலரும் ஆளாகி வருகின்றனர்.

 

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, தமக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தாம் நலமுடன் இருப்பதாகவும், தம்முடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 87 பேருக்கு சில நாட்களுக்கு முன் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆளுநர் பன்வாரி லாலுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

 

இந்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு அறிகுறி இல்லாத லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உ.பி.யில் ஆளும் பாஜக பெண் அமைச்சர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 62 வயதான கமல் ராணி வருண் என்ற அந்த அமைச்சர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon