மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடி வந்த ஆண் யானை உயிரிழப்பு. தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழப்பதால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி அருகே உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உடல் நலக்குறைவால் படுத்த நிலையில் உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்த நிலையில் உயிருக்கு போராடியபடி இருந்த சுமார் 11 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானைக்கு தீவீர சிகிச்சை அளித்து வந்தனர்.
முதல் கட்ட மருத்துவ ஆய்வில் யானையின் வாய் பகுதியில் ஏற்பட்ட புண்ணால் சில நாட்களாக உணவு உண்ண முடியாமல் யானை அவதியுற்றுள்ளதாகவும்,இதனால் யானை உடல் மெலிந்து பலகீனமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் யானை உயிரிழந்தது.கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யானையின் உடல் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது.காட்டு யானைகளின் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,சிறப்புக் குழு இதுவரை ஆய்வை துவங்காத நிலையில் மேலும் ஒரு ஆண் காட்டு யானை உயிரிழந்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடமும், வனத்துறையினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






