தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்க திட்டம்..!
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 24-ம் தேதிக்கு முன்னதாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, ஆறு மாத கால இடைவெளியில் கூட்டத்தொடர் நடத்தப்படவேண்டும்.
வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மே மற்றும் ஜூன் மாதங்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படும். இதனையடுத்து ஆறு மாதங்கள் கடந்த பிறகு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஜனவரியில் மீண்டும் தொடங்கும்.
கடந்த சில வருடங்களாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் 31-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு பின்னர் அவசர அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 24ம் தேதியில் முடித்து வைக்கப்பட்டது.
தற்போது ஆறு மாதத்திற்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால் குளிர்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை குளிர்கால கூட்டம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.






